ஆதிசைவம் – அந்தம் இல்லா ஆதி உடையது

ஆதிசைவம் – அந்தம் இல்லா ஆதி உடையது

ஆதிசைவத்தை அறிமுகப்படுத்த முயற்சி செய்வது, ஆண்டவனையே, சிவனையே அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்குச் சமம். அது சாத்தியம் இல்லாதது என்பது மட்டும் அல்லாது, வாழ்ந்து மட்டுமே பார்த்து, அனுபவித்து மட்டுமே பார்க்கக்கூடியது என்கின்ற தகுதி உடையது ஆதிசைவம்.

ஆண்டவனை அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்து மட்டும்தான் பார்க்க இயலும். ஆதிசைவத்தையும் அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்துதான் பார்க்க இயலும். ‘அறிமுகப்படுத்த இயலாது’ என்கின்ற அறிமுகத்தை வேண்டுமானால் அளிக்க இயலும்.

ஆதிசைவம், இந்தப் பேரருள் வடிவான ஞானப் பிரபஞ்சத்தில் என்றென்றும் விரிவடைந்து கொண்டே சென்று கொண்டேயிருக்கும். மரணம் இல்லாத சிரஞ்சீவியான, நிரந்தரமான இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் தோன்றியபொழுது, அவ்வுயிர் எவ்வாறு தன் வாழ்க்கையை மேம்படுத்தி, பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் தன் உள்ளிருந்து வெளிப்படுத்தி, ‘கடவுள் துகள்’ என்கின்ற நிலையிலிருந்து ‘கடவுளாக’மாறுவது எப்படி, தன்னுடைய இருப்பு நிலையை… பிரபஞ்சத்தின் வடிவமாக, அகண்ட சச்சிதானந்த பரிபூரண நிலையில் நிலைநிறுத்திக் கொள்வது எப்படி என்கின்ற அறிவியலே ஆதிசைவம், வாழ்விலே ஆதிசைவம்.

இப்போது நான் கொடுத்த இந்த வரைமுறை பள்ளியில், ஒரு பக்கக் கட்டுரை வரைக என்று ஒரு கேள்வியைக் கேட்டு, பத்து மதிப்பெண்களுக்கு அந்தக் கேள்வியை நிர்ணயித்தால், ஒரே வரியிலே நீங்க விளக்கம் கொடுக்கற மாதிரி, அறிமுகப்படுத்த முடியாத ஆதிசைவத்தை, சில வரிகளில் சொல்ல நான் செய்த முயற்சிதான் இது.

உயிர் பிரபஞ்சத்தில் மலர்ந்தவுடன், ‘கடவுள் துகள்’ என்கின்ற நிலையிலிருந்து ‘கடவுள்’ நிலையை உணர்வது, கடவுள் தன்மையைத் தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவது, கடவுள் நிலையிலேயே இருப்பு கொள்வது என்கின்ற மிகப்பெரிய வழியின் அறிவியல், அதை அடைவதற்கான, வாழ்வதற்கான அறிவியல் ஆதிசைவம்.

வரலாற்றை வைத்தோ, நிலைகொண்ட புவியியல் சூழல்களைச் சார்ந்தோ ஆதிசைவத்தைச் சுருக்குவது சாத்தியமே இல்லாதது. ஏனென்றால், வரலாறு… துவக்கமும் முடிவும் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் இருக்க முடியும். ஓரிடத்தில் இருந்து, இன்னோர் இடத்தில் இல்லாத ஒன்றைத்தான், புவியியல் ரீதியாக நாம் அடையாளம் காட்ட முடியும்.

அந்தம் இல்லாத ஆதி உடையது, ஒன்று இரண்டாக மாற முடியாத அளவுடையது ஆதிசைவம். அதனால், வரலாறு சார்ந்தோ, புவியியல் சார்ந்தோ ஆதிசைவத்தை விளக்குவது சாத்தியமில்லாதது, வரையறுப்பது சாத்தியமில்லாதது.

மதம் உருவாவதற்கு முன்பே மலர்ந்த மலர்

ஒரு காலத்தில் தோன்றி, ஒரு காலத்தில் இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம். ஓரிடத்தில் இருந்து, ஓர் இடத்தில் கடைபிடிக்கப்படாமல் போவது கிடையாது ஆதிசைவம்.

புவிஈர்ப்பு விசை எப்படி புவி முழுக்க இருக்கின்றதோ, அதே போல பிரபஞ்சம் சில குணங்களால், சத்தியங்களால் முழுமையாக நிறைந்து, அந்தச் சத்தியங்களைச் சார்ந்து இயங்குகிறது. அந்தச் சத்தியங்கள்தான் ஆதிசைவம். புவிஈர்ப்பு விசை ஓர் இடத்தில் இருக்கிறது, இன்னொரு இடத்தில் இல்லை என்று செல்ல முடியுமா? முடியாது. எப்படிப் புவி முழுவதும் புவிஈர்ப்பு விசை நிறைந்திருக்கின்றதோ, அதுபோல பிரபஞ்சம் முழுவதும் சில விதிகள், சத்தியங்கள், சாத்தியங்கள், கருத்துக்கள், உண்மைகள் நிறைந்து இந்தப் புவியே இயங்குகிறது. இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அந்தச் சத்தியங்களை, அந்தப் பிரபஞ்சமே குறை இலாது, முறைதவறாது வெளிப்படுத்திய வாழ்வியல்முறைதான் ஆதிசைவம்.

பிரபஞ்சப் பேரருள், பிரபஞ்சப் பரம்பொருள் வடிவம், வடிவமின்மை என்னும் நிலைகளைக் கடந்து தன்னுடைய சாந்நித்ய இருப்பின் மாத்திரத்தாலேயே வெளிப்படுத்திய சத்தியங்களைத்தான் வேதங்கள் என்று சொல்கிறோம். வேதங்களின் சாரம் உபநிடதங்கள்.

பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் தன்னுடைய நித்யானந்த நிலையில் இருந்தவாறே, தானே தன் மயமாய் தனக்குள்ளேயே ரசித்துக்கொண்டிருக்கும், தனக்குள்ளேயே அதை வாழ்ந்து கொண்டிருக்கும், தனக்குள்ளேயே தன்னையே ருசித்துக்கொண்டிருக்கும் அந்தத் தன்மயானந்த நிலையில் இருந்தவாறே வெளிப்படுத்திய, உணர்த்திய பிரபஞ்சத்தின் சத்தியங்கள்தான் வேதங்கள்.

அதன் சாரம் உபநிடதங்கள்.

தன் இருப்பினாலேயே, தன்னுடைய இருப்பின் சாந்நித்யத்தினாலேயே, சாந்நித்ய பலத்தினாலேயே வெளிப்படுத்திய சத்தியங்கள் வேதங்களும் உபநிஷதங்களும்.

அதே பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் தன்னுடைய நித்யானந்த நிலையிலேயே, தான் இருப்பது மட்டுமல்லாது, உயிர்கள் எல்லாம் உய்வடைய, உத்தம நிலை அடைய, தன் நிலைதனை உயிர்கள் எல்லாம் உணர்ந்திட சதாசிவனாய் திருமேனி கொண்டு உலகத்திற்கு வெளிப்படுத்தியவையே ஆகமங்கள்.

ஒவ்வொருவரும் பிரபஞ்சப் பேரருள் நிலையிலிருந்து சுத்த சிவாத்வைத சத்தியத்தை வாழ்ந்திட, சுத்த சிவாத்வைத சத்தியத்தில் நிலைபெற்று பொங்கி மலர்ந்திட, திருமேனி தாங்கி சதாசிவனாய் பெருமானே உலகிற்காக வெளிப்படுத்திய சத்தியங்கள்தான் ஆகமங்கள்.

வேதங்களைச் சார்ந்து, உபநிடதங்களைச் சார்ந்து பெருமானே வெளிப்படுத்திய ஆகமங்களைச் சார்ந்து, உலகமெல்லாம் உய்வதற்கான ஜீவன்முக்த விஞ்ஞானமாக, வாழ்வியல் நெறியாக மலர்ந்ததுதான் ஆதிசைவம்.

ஆதிசைவம் ஆதி மதம் மட்டும் அல்லாது, மதம் என்கின்ற கருத்து உருவாவதற்கு முன்பாகவே மலர்ந்த ஒரு ஆன்மீக வாழ்வியல் நெறி. வேறு வேறு நாடுகளில், இடங்களில் இருக்கின்ற மக்கள் கல்லாலே ஆயுதங்கள் செய்து, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு, காட்டு மிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலத்தில், நாங்கள் ‘கல் ஆலயம்’ செய்து, ஜீவன்முக்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வியல் நெறி ஆதிசைவம்.