திருஞானசம்பந்தர் புராணம் (1/1256)

*திருச்சிற்றம்பலம்*

***************************************************

*சேக்கிழார் பெருமான் அருளிய 12ம் திருமுறை*

***************************************************

*திருஞானசம்பந்தர் புராணம் (1/1256)*

***************************************************

வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப்  புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித்  திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

***************************************************

பொருள்

*வேதம்* – மறை, சாத்திரம், இறைவனின் திருவாக்கு, கண்களாலும், கருத்தினாலும் அறியப்பாடாத பொருளை அறிவதற்கு கருவியாக உள்ள பொருள் வேதம்.

*நெறி* – வழி, சமயம், விதி, ஒழுக்கம்.

தழைத்தோங்க* – வளர்ச்சியடைதல் – வழி செல்பவர்களுக்கு பாதையில் முள்ளும் கல்லும் பல்லமும் உள்ளது போல, வேத வழி செல்வோர்களுக்கு வழியில் நிழலும் நீரும் உதவி புரியும்.

*மிகுசைவத் துறைவிளங்கப்*

வேதம்- நெறி என்றும், சைவம்- துறை என்றும் கூறப்பட்டன.  உலகில் பல சமயத்துறைகள் இருப்பினும் அவற்றுள் சைவத்துறையே எத்தகைய குறைபாடும் இன்றி விளங்கி வருகிறது.

வேதநெறி என்பது வேதவிதிப்படி நிகழும் வைதீக ஒழுக்கம்

சைவத்துறை என்பது சிவாகம விதிப்படி நிகழும் சரியை, கிரியை முதலிய சிவதர்மங்கள். வேதம் முடிந்த இடத்தில் சிவாகமம் தொடங்குகிறது.

*பூதபரம்ப ரைபொலியப்*

பூதம் என்பது உயிர்கள். அதாவது உயிர்கள் பிறவியின் மூலம் தோற்றிவிக்கப்படுகிறது. உயிர்கள் வழிவழியாக பிறப்பெடுத்து பக்குவத்திற்கேற்ப பொலிவு பெறுதல் என்று பொருள்.

*புனிதவாய் மலர்ந்தழுத*

திருஞானசம்பந்தர் பிரமதீர்த்தக்கரையில் நின்று சிகரம் நோக்கி அம்மே யப்பா என்று அழுது ஞான அமுதம் பெறுதற்கு முன்னும் அத்திருவாய் புனிதமுடையது என்பது பொருள்.

*சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்*

சீகாழி ஊருக்கு 12 திருப்பெயர்களில் 3வது பெயர் திருப்புகலி. அத்திருத்தலம் போலவே திருஞானசம்பந்தரின் பாத மலர்களை புகலடைந்தார்களுக்கு பிறவி வெப்பம் தீர்க்க வல்லன என்பது பொருள்.

*பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்*

திருஞானசம்பந்தரின் திருவடிகளைத் தலைமேற் சூடி அவரது திருத் தொண்டின் வரலாற்றினைத் துதிக்கப் போகிறேன் என்று சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தரின் புராணத்தை எடுத்துரைக்கிறார்.

***************************************************

கோபுரகலசம் சேகர்

சித்திரை – 1

*www.sivaperuman.com* – 14.04.2017

***************************************************