13.01. வெள்ளானைச் சருக்கம் (4229 – 4281)

திருச்சிற்றம்பலம்

Artilce_Header_all


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்  12-ம் திருமுறை

13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்


13. வெள்ளானைச் சருக்கம்

13.01 வெள்ளானைச் சருக்கம் (4229-4281)

13.01. வெள்ளானைச் சருக்கம் (4229 – 4281)

திருச்சிற்றம்பலம்

4229

மூலம் ஆன திருத்தொண்டத் தொகைக்கு முதல்வராய் இந்த
ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தம்பிரான் தோழர்
காலை மலர்ச் செங்கமலக்கண் கழற்று அறிவார் உடன் கூட
ஆலம் உண்டார் திருக் கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம்

13.1.1

 

4230

படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி
வடிவு நம்பி ஆரூரர் செம் பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி
முடிவு இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்ததால்

13.1.2

 

4231

ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர்
ஈர மதுவார் மலர்ச்சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள்
சேரர் பெருமாள் தனை நினைந்து தெய்வப் பெருமாள் கழல் வணங்கிச்
சாரல் மலைநாடு அணைவதற்குத் தவிரா விருப்பின் உடன் போந்தார்

13.1.3

 

4232

நன்ன்ணர்ப் பொன்னித் திரு நாட்டு நாதர் மகிழும் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லைப் படப்பைக்கு ஒல்லைமான்
துன்னி உகைக்கும் குடக் கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர்
சென்னி மிசை வைத்தவர் செல்வத் திருப்புக்கு ஒளியூர் சென்று அடைந்தார்

13.1.4

 

4233

மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி மருங்கு அணைவார்
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள்
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றினில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார்

13.1.5

 

4234

அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை
முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம்
இந்த மனை மற்று அந்தமனை இழந்தார் அழுகை என்று உரைத்தார்

13.1.6

 

4235

இத்தன்மையினைக் கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம்
மொய்த்த முகைத்தார் வன்தொண்டர் தம்மை முன்னே கண்டு இறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும் மனைவிதானும் மகிழ் இழந்த
சித்த சோகம் தெரியாமே வந்து இருந்தாள் இறைஞ்சினார்

13.1.7

 

4236

துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார் தம்மை முகம் நோக்கி
இன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ என்ன எதிர் வணங்கி
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல் கின்றோம்
அன்பு பழுது ஆகாமல் எழுந்து அருளப் பெற்றேம் எனத் தொழுதார்

13.1.8

 

4237

மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானும் சிறுவனையான்
அந்த முதலையின் வாய் நின்றும் அழைத்துக் கொடுத்த அவிநாசி
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார்

13.1.9

 

4238

இவ்வாறு அருளிச் செய்து அருளி இவர்கள் புதல்வன் தனைக் கொடிய
வெவ்வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவிக் கேட்டு
அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர்
வைவாள் எயிற்று முதலை கொடு வருதற்கு எடுத்தார் திருப்பதிகம்

13.1.10

 

4239

உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த
வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவாயில் உடலில்சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான்

13.1.11

 

4240

பெருவாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை
உருகா நின்ற தாய் ஓடி எடுத்துக் கொடுவந்து உயிர் அளித்த
திருவாளன் தன் சேவடிக்கீழ் மறையோன் ஒடு வீழ்ந்தாள்
மருவார் தருவின் மலர் மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள்

13.1.12

 

4241

மண்ணினுள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது
அண்ணலாரும் அவிநாசி அரனார் தம்மை அருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினிமேல்

13.1.13

 

4242

பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு
விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்பக் கலியாணம் முடித்து முடிச் சேரலர் தம்பால்
குரவ மலர்ப் பூந்தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார்

13.1.14

 

4243

சென்ற சென்ற குட புலத்துச் சிவனார் அடியார் பதிகள் தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும்
துன்று மணிநீர்க் கான் ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம்புகுந்தார்

13.1.15

 

4244

முன்னாள் முதலை வாய்புக்க மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னாரூரர் எழுந்து அருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு
அந்நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்பப்
பொன்னார் கிழியும் மணிப்பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார்

13.1.16

 

4245

செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களி கூர்ந்து
என் ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்று வித்தார்

13.1.17

 

4246

பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர் எழுந்து அருளப்
பொருவில் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்து
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும்
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார்

13.1.18

 

4247

மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில்
சிலை நாட்டிய வெல் கொடித்தானைச் சேரர் பெருமான் எதிர் சென்று
தலை நாள் கமலப் போது அனைய சரணம் பணியத் தாவில் பல
கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர் ஆல்

13.1.19

 

4248

சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள்
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய்
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர்ச் செல்வம் வினவி இன்புற்றார்

13.1.20

 

4249

ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல்
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசை ஏற்றித் தாம் பின் மதிவெண் குடை கவித்தார்

13.1.21

 

4250

உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப
கதிர் வெண் திரு நீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளித் துகள் ஆர்ப்ப
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணிவாயிலை அணைந்தார்

13.1.22

 

4251

ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின
பூரண கலசம் மலிந்தன பூ மழை மகளிர் பொழிந்திடும்
தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம்

13.1.23

 

4252

அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன
சுரிவனை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி
விரிதரு பவன நெடும் கடை விறல் மத கரியின் இழிந்தனர்

13.1.24

 

4253

தூ நறு மலர் தரளம் பொரிதூவி முன் இரு புடையின் கணும்
நான் மறை முனிவர்கள் மங்கல நாம நன்மொழிகள் விளம்பிட
மேல் நிறை நிழல் செய வெண் குடை வீசிய கவரி மருங்கு உற
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர்

13.1.25

 

4254

அரியணை அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை
வரிமலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின்
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவில என முன் செய்து
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர்

13.1.26

 

4255

இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்தாம் இடர் கெட முனைப்பாடி
மன்னர் தம் உடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடுஎங்கும்
பன்னகம் புனை பரமர் தம் திருப்பதி பல உடன் பணிந்து ஏத்திப்
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன்தொண்டர்

13.1.27

 

4256

ஆய செய்கையில் நாள் பல கழிந்தபின் அரசர்கள் முதல் சேரர்
தூய மஞ்சனத் தொழில் இனின் தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
பாய கங்கை சூழ் நெடும் சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்து எய்தும்
சேய நல்நெறி குறுகிடக் குறுகினார் திருவஞ்சைக் களம் தன்னில்

13.1.28

 

4257

கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந்து இறைவர் தம் பூம் கழல் இணை போற்றி
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை
சரியவே தலைக்குத் தலை மாலை என்று எடுத்தனர் தமிழ் மாலை

 

13.1.29

4258

எடுத்த அத்திருப் பதிகத்தின் உள் குறிப்பு இவ்வுலகினில் பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாடக்
கடுத்த தும்பிய கண்டர் தம் கயிலையில் கணத்தவருடன் கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத் தங்கு அழல் சார்பு தந்து அளிக்கின்றார்

13.1.30

 

4259

மன்றலந் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை வல்லியுடன் கூட
வென்றி வெள்விடைப் பாகர் தாம் வீற்று இருந்து அருளிய பொழுதின் கண்
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றிச்
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர் கட்கு அருள் செய்தார்

13.1.31

 

4260

வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடை கொண்டு
தூ நலம் திகழ் சோதி வெள்ளானையும் கொண்டு வன் தொண்டர்க்குத்
தேன் அலம்பு தண் சோலை சூழ் மாகோதையில் திருவஞ்சைக் களம் சேரக்
கானிலங் கொள வலம் கொண்டு மேவினார் கடிமதில் திருவாயில்

13.1.32

 

4261

தேவர் தங்குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவல் ஊரர்தம்
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்று இருக்கின்ற
பூவலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இப் பாடு என போற்றி
ஏவல் என்றபின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிரேற்றார்

13.1.33

 

4262

ஏற்ற தொண்டரை அண்டர் வெள்ளானையின் எதிர் வலம் கொண்டு ஏற்ற
நாற்றடங் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்பப்
போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிர் எல்லாம்
சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார்

13.1.34

 

4263

சேரர் தம்பிரான் தோழர் தஞ்செயல் அறிந்து அப்போதே
சார நின்றதோர் பரியினை மிசைக் கொண்டு திருவஞ்சைக் களம்சார்வார்
வீர வெண் களிறுகைத்து விண்மேல் செலும் மெய்த்தொண்டர் தமைக் கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார்

13.1.35

 

4264

விட்ட வெம்பரிச் செவியினில் புவி முதல் வேந்தர் தாம் விதியாலே
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழப் பாய்ந்து
மட்டலர்ந்த பைந் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை
முட்ட எய்தி வலம் கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக

13.1.36

 

4265

உதியர் மன்னவர் தம் பெரும் சேனையின் உடன் சென்ற படைவீரர்
கதிகொள் வாசியில் செல்பவர் தம்மைத்தங்கட்புலப்படும் எல்லை
எதிர் விசும்பினில் கண்டு மின் கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறை முறை உடல் வீழ்ந்தார்

13.1.37

 

4266

வீரயாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானைச்
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனித் தொண்டர்மேல் கொண்ட
வாரும் மும் மதத்து அருவி வெள்ளானைக்கு வயப் பரி முன் வைத்துச்
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசை நோக்கி

13.1.38

 

4267

யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்
தானை முன் செலத் தானெனை முன் படைத்தான் எனும் தமிழ் மாலை
மானவன் தொண்டர் பாடி முன் அணைந்தனரர் மதி நதி பொதி வேணித்
தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில்

13.1.39

 

4268

மாசில் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை
ஆசில் அன்பர் தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணிவாயில்
தேசுதங்கிய யானையும் புரவியும் இழிந்து சேண் இடைச் செல்வார்
ஈசர் வெள்ளி மா மலைத் தடம் பல கடந்து எய்தினார் மணிவாயில்

13.1.40

 

4269

அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர்
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே
பொங்கு மா மதம் பொழிந்த வெள்ளானையின் உம்பர் போற்றிடப் போந்த
நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு

13.1.41

 

4270

சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேண் இடை விட்டு
அகன்று கோவினைக் கண்டு அணைந்தது எனக் காதலின் விரைந்து எய்தி
நின்று போற்றிய தனிப் பெரும் தொண்டரை நேர் இழை வலப் பாகத்து
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகுய்ய

13.1.42

 

4271

அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்ட தொடக்கினை நீக்கி
முடிவிலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர்
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர்

13.1.43

 

4272

நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர்க் கழல் சாரச்
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் எனச் செப்ப
குன்ற வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி

13.1.44

 

4273

மங்கை பாகர் தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கைவார் சடைக் கயிலை நாயகர் திருமுறுவலின் கதிர் காட்டி
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள் செய்தார்

13.1.45

 

4274

அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப்
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணைத் தொண்டு
இரை செய் வெள்ளமுன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப் பெற்றேன்
விரைசெய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று

13.1.46

 

4275

பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு அரும் பெருமையாய் உனை அன்பால்
திருஉலாப் புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெற வேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார்

13.1.47

 

4276

சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருஉலாப் புறம் கொண்டு
நாரி பாகரும் நலம் மிகு திரு அருள் நயப்புடன் அருள் செய்வார்
ஊரன் ஆகிய ஆலால சுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும்
சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள் செய்தார்

13.1.48

 

4277

அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரர் ஆகித் தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும்
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார்

13.1.49

 

4278

தலத்து வந்துமுன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும்
நலத்தின் மிகக் கவர் வல்வினைத் தொடக்கற நாயகி அருளாலே
அலத்த மெல்லடிக் கமலினியாருடன் அனிந்தை யாராக்஢
மலைத் தனிப் பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழிநின்றார்

13.1.50

 

4279

வாழி மாதவர் ஆலால சுந்தரர் வழி இடை அருள் செய்த
ஏழிசைத் திருப்பதிகம் இவ்வுலகினில் ஏற்றிட எறி முன்நீர்
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அவ் அருள் சூடி
ஊழியில் தனி ஒருவர் தம் திருவஞ்சைக் களத்தில் உய்த்து உணர்வித்தான்

13.1.51

 

4280

சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் திருஉலாப் புறம் அன்று
சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே

13.1.52

 

4281

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான் புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

13.1.53

திருச்சிற்றம்பலம்

வெள்ளானைச் சருக்கம் முற்றிற்று.
இரண்டாம் காண்டம் முற்றிற்று.
பெரிய புராணம் முற்றிற்று.

 

 

Leave a Reply