10.5 கோட்புலி நாயனார் புராணம் (4134- 4146)

திருச்சிற்றம்பலம்

Artilce_Header_all


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்  12-ம் திருமுறை

13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்


10. கடல் சூழ்ந்த சருக்கம்

10.01 கழற்சிங்க நாயனார் புராணம் (4096-4108)
10.02 இடங்கழி நாயனார் புராணம் (4109-4119)
10.03 செருத்துணை நாயனார் புராணம் (4120-4126)
10.04 புகழ்த்துணை நாயனார் புராணம் (4127-4133)
10.05 கோட்புலி நாயனார் புராணம் (4134-4146)

10. கடல் சூழ்ந்த சருக்கம்

10.5 கோட்புலி நாயனார் புராணம் (4134- 4146)

திருச்சிற்றம்பலம்

 

4134

நலம் பெருகும் சோணாட்டு நாட்டி யத்தான் குடி வேளாண்
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார்
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்றுப்
புலம் பெருகத் துயர் விளைவிப்பப் போர் விளைத்துப் புகழ் விளைவிப்பார்

10.5.1

 

4135

மன்னவன்பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும்
பிஞ்ஞகர் தம் கோயில் தொறும் திரு அமுதின் படிபெருகச்
செந்நெல் மலைக் குவடு ஆகச் செய்து வரும் திருப்பணியே
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள்

10.5.2

 

4136

வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனைமேல் செல்கின்றார்
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்
வாய்ந்த கூடவை கட்டி வழிக் கொள்வார் மொழிகின்றார்

10.5.3

 

4137

தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க
சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையாக் கலி என்று
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனைமேல்

10.5.4

 

4138

மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம்
உற்றலும் அச் சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில்
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்துக்
குற்றம் அறப் பின் கொடுப்போம் எனக் கூடு குலைத்து அழித்தார்

10.5.5

 

4139

மன்னவன் தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்பால்
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே
துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய்

10.5.6

 

4140

எதிர் கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து
மதி தங்கு சுடர் மணி மாளிகையின் கண் வந்து அணைந்து
பதி கொண்ட சுற்றத் தார்க்கு எல்லாம் பைந் துகில் நிதியம்
அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழைமின்கள் என்று உரைத்து

10.5.7

 

4141

எல்லாரும் புகுந்த அதன்பின் இருநியம் அளிப்பார் போல்
நல்லார்தம் பேரோன் முன் கடை காக்க நாதன் தன்
வல்லாணை மறுத்து அமுதுபடி அழைத்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ எனக் கனன்று கொலைபுரிவார்

10.5.8

 

4142

தந்தையார் தாயார் மற்றுடன் பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும்
எந்தையார் திருப்படி மற்று உண்ண இசைந்தார் களையும்
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினைப் பவம் துணிப்பார்

10.5.9

 

4143

பின் அங்குப் பிழைத்த ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் அவ்
வன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என
இந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது என எடுத்து எறிந்து
மின்னல்ல வடிவாளால் இரு துணியாய் விழ ஏற்றார்

10.5.10

 

4144

அந் நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று
உன்னுடைய கை வாளால் உறுபாசம் அறுத்த கிளை
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணையப் புகழோய் நீ
இந்நிலை நம்முடன் அணைக என்றே எழுந்து அருளினார்

10.5.11

 

4145

அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த
கொத்து அலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய் பணிவார் தம் பரிசினையாம் பகருவாம்

10.5.12

 

4146

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
மேவரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ
ஆவதும் ஓர்பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே
நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த
சேவடிப் போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தனவால்

10.5.13

திருச்சிற்றம்பலம்

கடல் சூழ்ந்த சருக்கம் முற்றிற்று.

 

Leave a Reply