09.02. காரிநாயனார் புராணம் (4064 – 4068 )

திருச்சிற்றம்பலம்

Artilce_Header_all


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்  12-ம் திருமுறை

13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்


9. கறைக் கண்டன் சருக்கம்
9.01 கணம்புல்ல நாயனார் புராணம் (4055-4063)
9.02 காரிநாயனார் புராணம் (4064-4068)
9.03 நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம் (4069-4078)
9.04 வாயிலார் நாயனார் புராணம் (4079-4088)
9.05 முனையடுவார் நாயனார் புராணம் (4089-4095)

9.கறைக் கண்டன் சருக்கம்

09.02. காரிநாயனார் புராணம் (4064 – 4068 )

திருச்சிற்றம்பலம்

4064

மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்
குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்

9.2.1

 

4065

அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி
கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச்
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்

9.2.2

 

4066

யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பத்
தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய்

9.2.3

 

4067

ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி
ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினராய் அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்

9.2.4

 

4068

வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும்
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்

9.2.5

 

திருச்சிற்றம்பலம்

 

Leave a Reply