05.02 குலச்சிறை நாயனார் புராணம் (1700 – 1710)

திருச்சிற்றம்பலம்

Artilce_Header_all


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்  12-ம் திருமுறை

13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்


5. திருநின்ற சருக்கம்

5.01 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் (1271- 1699)
5.02 குலச்சிறை நாயனார் புராணம் (1700-1710)
5.03 பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் (1711-1721)
5.04 காரைக்கால் அம்மையார் புராணம் (1722-1787)
5.05 அப்பூதி அடிகள் நாயனார் புராணம் (1788-1832)
5.06 திரு நீல நக்க நாயனார் புராணம் (1833-1870)
5.07 நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் (1871-1903)

5. திருநின்ற சருக்கம்

05.02 குலச்சிறை நாயனார் புராணம் (1700 – 1710)

திருச்சிற்றம்பலம்

1700 ,

பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச்
செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல்
துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மண மேற்குடி , 5.2.1

 

1701 ,

அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம்
ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய
செப்பரும் சீர்க் குலச் சிறையார் திண்மை
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் , 5.2.2

 

1702 ,

காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே
வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் , 5.2.3

 

1703 ,

குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில்
செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார் , 5.2.4

 

1704 ,

உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில்
தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார் , 5.2.5

 

1705 ,

பண்பு மிக்கார் பலராய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் , 5.2.6

 

1706 ,

பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து
ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை
ஓது நா வணக்கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார் , 5.2.7

 

1707 ,

இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த்
தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ்
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார்
ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார் , 5.2.8

 

1708 ,

ஆய செய்கையர் ஆயவர் ஆறணி
நாயனார் திருப் பாதம் நவின்று உளார்
பாய சீர் புனை பாண்டி மா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார் , 5.2.9

 

1709,

புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும்
தென்னர் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் , 5.2.10

 

1710,

வாதில் தோற்ற அமணரை வன் கழுத்
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர் தாள் , 5.2.11

 

திருச்சிற்றம்பலம்

Leave a Reply