01.04. திருக்கூட்டச் சிறப்பு

திருச்சிற்றம்பலம்

Artilce_Header_all


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்  12-ம் திருமுறை

13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்


1. திருமலைச் சருக்கம்
1.00 பாயிரம் (1-10)
1.01 திருமலைச் சிறப்பு (11-50)
1.02 திரு நாட்டுச் சிறப்பு (51-85)
1.03 திருநகரச் சிறப்பு (86-135)
1.04 திருக்கூட்டச் சிறப்பு (136-146)
1.05 தடுத்தாட்கொண்ட புராணம் (147-349)

1. திருமலைச் சருக்கம்

1.4 திருக்கூட்டச் சிறப்பு

திருச்சிற்றம்பலம்

 

136 .

பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற்
சோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ்
மூதெயில் திரு வாயில் முன்னாயது. .1.4.1

 

137.

பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
ஓவாது எவரும் நிறைந்து உள்ளது
தேவா சிரியன் எனுந் திருக் காவணம். .1.4.2

 

138.

அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்
புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால்
பரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது. .1.4.3

 

139.

அகில காரணர் தாள பணிவார்கள் தாம்
அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று
அகில லோகத்து உளார்கள் அடைதலின்
அகில லோகமும் போல்வத தனிடை. .1.4.4

 

140.

அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்
மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார். .1.4.5

 

141.

மாசிலாத மணி திகழ் மேனி மேல்
பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்
தேசினால் எத் திசையும் விளங்கினார்
பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார். .1.4.6

 

142.

பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்
மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்
கோதிலாத குணப் பெருங் குன்றனார். .1.4.7

 

143.

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார். .1.4.8

 

144.

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவு இலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ? .1.4.9

 

145.

வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்
நீண்ட தொல் புகழார் தம் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன். .1.4.10

 

146.

இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்
சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம். .1.4.11

 

திருச்சிற்றம்பலம்

Leave a Reply