01.03. திருநகரச் சிறப்பு

திருச்சிற்றம்பலம்

Artilce_Header_all


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்  12-ம் திருமுறை

13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்


1. திருமலைச் சருக்கம்
1.00 பாயிரம் (1-10)
1.01 திருமலைச் சிறப்பு (11-50)
1.02 திரு நாட்டுச் சிறப்பு (51-85)
1.03 திருநகரச் சிறப்பு (86-135)
1.04 திருக்கூட்டச் சிறப்பு (136-146)
1.05 தடுத்தாட்கொண்ட புராணம் (147-349)

1. திருமலைச் சருக்கம்

1.03 திருநகரச் சிறப்பு

திருச்சிற்றம்பலம்

 

086 .

சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
மன்னு மாமலராள் வழி பட்டது
வன்னியாறு மதி பொதி செஞ் சடைச்
சென்னியார் திருவாரூர்த் திருநகர். .1.3.1

 

087.

வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும்
கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே. .1.3.2

 

088.

பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி எழுந்துள எங்கணும். .1.3.3

 

089.

மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
நீடு சாளர நீடரங்கு எங்கெணும்
ஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன . .1.3.4

 

090.

அங்குரைக்கென்ன அளவப் பதியிலார்
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்
பங்கினாள் திருச் சேடி பரவையாம்
மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை. .1.3.5

 

091.

படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூது போய்
நடந்த செந்தாமரை அடி நாறுமால். .1.3.6

 

092.

செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்
குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி அளறு புலர்த்துமால். .1.3.7

 

093.

உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம்
தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள். .1.3.8

 

094.

விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்
வளத் தொடும் பலவாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள். .1.3.9

 

095.

ஆரணங்களே அல்ல மறுகிடை
வாரணங்களும் மாறி முழங்குமால்
சீரணங்கிய தேவர்களே அலால்
தோரணங்களில் தாமமும் சூழுமால். .1.3.10

 

096.

தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வேறு இடத்தத் தொல் நகர். .1.3.11

 

097.

நில மகட்கு அழகார் திரு நீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்(து)
அலகில் சீர்த்திருவாரூர் விளங்குமால். .1.3.12

 

098.

அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
துன்னு செங் கதிரோன் வழித் தோன்றினான்
மன்னு சீர் அநபாயன் வழி முதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே. .1.3.13

 

099.

மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்
விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண்ணிலாதன் மாண இயற்றினான் . .1.3.14

 

100.

கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனுப்
பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான். .1.3.15

 

101.

பொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால். .1.3.16

 

102.

அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி
மறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்
சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான். .1.3.17

 

103.

தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
சிவ முயன்றடையுந் தெய்வக் கலை பல திருந்த ஓதிக்
கவனவாம் புரவி யானை தேர்ப் படைத் தொழில்கள் கற்றுப்
பவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான். .1.3.18

 

104.

அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி
வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன். .1.3.19

 

105.

திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று
மங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்
கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்
பொங்கிய தானை சூழ்த் தேர்மிசைப் பொலிந்து போந்தான். .1.3.20

 

106.

பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி. .1.3.21

 

107.

தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்
பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகினூடே. .1.3.22

 

108.

அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்
செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே
உம்பரின் அடையக் கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும். .1.3.23

 

109.

மற்றுது கண்டு மைந்தன் “வந்ததிங்கு அபாயம்” என்று
சொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து
“பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச்
செற்ற, என் செய்கேன்” என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான். .1.3.4

 

110.

அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்
நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்
“மலர் தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்(கு)
உலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா ஒருவன்” என்பான். .1.3.5

 

111.

“வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன்” என்று மைந்தன்
சிந்தை வெந் துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான். .1.3.26

 

112.

தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி
முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே. .1.3.27

 

113.

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்
கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளாத்
தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது. .1.3.28

 

114.

ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி
“ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ! நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது” என்று சொன்னார். .1.3.29

 

115.

மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி
“என் இதற்குற்றது” என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்..1.3.30

 

116.

“வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை” என்றான். .1.3.31

 

117.

அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி
வெவ்விடந் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்”கிங்கு
இவ் வினை விளைந்தவாறு” என்று இடருறும் இரங்கும் ஏங்கும்
“செவ்விது என் செங்கோல்!” என்னும் தெருமரும் தெளியும் தேறான். .1.3.32

 

118.

“மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்
என்னெறி நன்றால்” என்னும் “என்செய்தால் தீரும்” என்னும்
தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்
அந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால். .1.3.33

 

119.

மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கிச்
“சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம்” என்றார். .1.3.34

 

120.

“வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு
குழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ?
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய இச்
சழக்கு இன்று நான் இசைந்தால் தருமந் தான் சலியாதோ?” .1.3.35

 

121.

மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
தான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
ஊன மிகு பகைத் திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ? .1.3.36

 

122.

“என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்
தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை
மன்னுலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு” என்றான். .1.3.37

 

123.

என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
“நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால்
பொன்று வித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடு நெறி யன்றோ? தொல் நிலங் காவல!” என்றார். .1.3.38

 

124.

அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன்
இவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடைத் தோய்ந்த
செவ் வண்ணக் கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான். .1.3.39

 

125.

“அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின்
செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ் உலகில் எப் பெற்றம் இப்பெற்றித் தாம் இடரால்
வெவ்வுயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது?” விளம்பீர். .1.3.40

 

126.

“போற்றிசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்
ஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்”. .1.3.41

 

127.

என மொழிந்து “மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன்
மனம் அழியுந் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
தனதுறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம்” என
அனகன் அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார். .1.3.42

 

128.

மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை
“முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க” என
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்பத்
தன்னுடைய குலமகனைத் தான் கொண்டு மறுங்கணைந்தான். .1.3.43

 

129.

ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்
மருமம் தன் தேராழி உறஊர்ந்தான் மனு வேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான். .1.3.44

 

130.

தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான். .1.3.45

 

131.

சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்குந் திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம்
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான். .1.3.46

 

132.

அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்
இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? .1.3.47

 

133.

அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து
நெடிது மகிழ்ந்து அருந் துயரம் நீங்கினான் நிலவேந்தன்
மடி சுரந்து பொழிதீம் பால் வருங் கன்று மகிழ்ந்துண்டு
படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே. .1.3.48

 

134.

பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்து
சென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும். .1.3.49

 

135.

இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து
முனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர் மேல்
புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ?
அனைய தனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில். .1.3.50
திருச்சிற்றம்பலம்

Leave a Reply