01.02. திரு நாட்டுச் சிறப்பு

திருச்சிற்றம்பலம்

Artilce_Header_all


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்  12-ம் திருமுறை

13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்


1. திருமலைச் சருக்கம்
1.00 பாயிரம் (1-10)
1.01 திருமலைச் சிறப்பு (11-50)
1.02 திரு நாட்டுச் சிறப்பு (51-85)
1.03 திருநகரச் சிறப்பு (86-135)
1.04 திருக்கூட்டச் சிறப்பு (136-146)
1.05 தடுத்தாட்கொண்ட புராணம் (147-349)

1. திருமலைச் சருக்கம்

1.02 திருநாட்டுச் சிறப்பு

திருச்சிற்றம்பலம்

051 .

பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்
கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
சூட்டிய வளர் புலிச் சோழர் காவிரி
நாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன். .1.2.1

052.

ஆதி மாதவமுனி அகத்தியன் தரு
பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால். .1.2.2

053.

சையமால் வரை பயில் தலைமை சான்றது
செய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டும் நீரது..1.2.3

054.

மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்
சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்
கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்
போலும் நான்முகனையும் பொன்னி மாநதி. .1.2.41

055.

திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்
பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்
எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே. .1.2.5

056.

வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்
எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது. .1.2.6

057.

வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கன்பரும் ஒக்குமால். .1.2.7

058.

வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்
தேசுடைத் தெனினும் தெளிவில்லதே. .1.2.8

059.

மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தரு
பூ விரித்த புதுமதுப் பொங்கிட
வாவியிற் பொலி நாடு வளம்தரக்
காவிரிப் புனல் கால்பரந்து ஓங்குமால். .1.2.9

060.

ஒண் துறைத் தலை மாமத கூடு போய்
மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரைத் தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால். .1.2.10

061.

மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே. .1.2.11

062.

உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம். .1.2.12

063.

மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார். .1.2.13

064.

செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை
அங்கை மலர்களைக் கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள்நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்
பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார். .1.2.14

065.

கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்
கரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம். .1.2.15

066.

கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி
வியல்வாய் வெள்வளைத் தரள மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம். .1.2.16

067.

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம். .1.2.17

068.

ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால். .1.2.18

069.

அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
துன்னும் மேதிபடியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின் மேற்பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால். .1.2.19

070.

காவினிற் பயிலுங்களி வண்டினம்
வாவியிற் படிந்து உண்ணும் மலர் மது
மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்
தாவி அப்பொழிலிற் கனி சாடுமால் .1.2.20

071.

சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச்
சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானுக் கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம். .1.2.21

072.

பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம். .1.2.22

073.

அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு யாப்பர்
விரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார். .1.2.23

074.

சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே. .1.2.24

075.

வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்
செய்ய பொற் குன்றும் வேறு நவமனிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்
மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு. .1.2.25

076.

அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப்
பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும். .1.2.26

077.

கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்
பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும். .1.2.27

078.

நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளி சாலந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும். .1.2.28

079.

சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும். .1.2.29

080.

மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்
பொங்கொளிக் கலன்கள் எங்கும் புது மலர்ப் பந்தர் எங்கும்
செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும். .1.2.30

081.

மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும். .1.2.31

082.

பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும். .1.2.32

083.

மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும். .1.2.33

084.

வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத் தாம் அஞ்சும் .1.2.34

085.

நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
பொற் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும்
கொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ. .1.2.35

திருச்சிற்றம்பலம்

Leave a Reply