01.00. பாயிரம்

1. திருமலைச் சருக்கம்
1.00 பாயிரம் (1-10)
1.01 திருமலைச் சிறப்பு (11-50)
1.02 திரு நாட்டுச் சிறப்பு (51-85)
1.03 திருநகரச் சிறப்பு (86-135)
1.04 திருக்கூட்டச் சிறப்பு (136-146)
1.05 தடுத்தாட்கொண்ட புராணம் (147-349)

திருமலைச் சருக்கம்

1.00 பாயிரம்

001

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். , 1.0.1

 

002,

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்;
தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ. , 1.0.2

 

003,

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம். , 1.0.3

 

004,

மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே. , 1.0.4

 

005,

அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன். , 1.0.5

 

006,

தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன். , 1.0.6

 

007,

செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால். , 1.0.7

 

008,

மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
ஆய சீர் அநபாயன் அரசவை. , 1.0.8

 

009,

அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே. , 1.0.9

 

010,

இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம். , 1.0.10

 

Leave a Reply