தில்லை வாழ் அந்தணர்கள் – (சித்திரை – முதல் நாள்)

சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்தவர்கள். இவர்கள் மூவாயிரம் பேரும் நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் முறையாகக் கற்று அதன்படியே நடந்து பிறருக்குத் தெளிவாக கற்றுக் கொடுப்பதிலும், சிறந்து விளங்கினர். இவர்கள் சைவ நெறிப்படி திருத்தொண்டு புரிந்து வந்ததால் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டர் தொகையில் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று சிவபெருமான் முதலடி எடுத்துக் கொடுத்த சிறப்பைப் பெற்றவர்கள். முறையான சிவவழிபாட்டிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள்.

தில்லைவாழந்தணர் புராணம்

பாடல் எண் : 1

ஆதியாய் நடுவு மாகி
அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
பொதுநடம் போற்றி போற்றி.

பாடல் எண் : 2

கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.

பாடல் எண் : 3

போற்றிநீள் தில்லை வாழந்
தணர்திறம் புகல லுற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல
நிருத்தனுக் குரிய தொண்டாம்
பேற்றினார் பெருமைக் கெல்லை
யாயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால்
அடித்தவம் புரிந்து வாழ்வார்.

பாடல் எண் : 4

பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில்
தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா
அகம்படித் தொண்டு செய்வார்.

பாடல் எண் : 5

வருமுறை எரிமூன் றோம்பி
மன்னுயி ரருளான் மல்கத்
தருமமே பொருளாக் கொண்டு
தத்துவ நெறியிற் செல்லும்
அருமறை நான்கி னோடுஆ
றங்கமும் பயின்று வல்லார்
திருநடம் புரிவார்க் காளாந்
திருவினாற் சிறந்த சீரார்.

பாடல் எண் : 6

மறுவிலா மரபின் வந்து
மாறிலா ஒழுக்கம் பூண்டார்
அறுதொழி லாட்சி யாலே
யருங்கலி நீக்கி யுள்ளார்
உறுவது நீற்றின் செல்வம்
எனக்கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன்பா லன்பாம்
பேறெனப் பெருகி வாழ்வார்.

பாடல் எண் : 7

ஞானமே முதலா நான்கும்
நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார்
தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார்
உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையுந் தாங்கி
மனையறம் புரிந்து வாழ்வார்.

பாடல் எண் : 8

செம்மையால் தணிந்த சிந்தைத்
தெய்வவே தியர்க ளானார்
மும்மைஆ யிரவர் தாங்கள்
போற்றிட முதல்வ னாரை
இம்மையே பெற்று வாழ்வார்
இனிப்பெறும் பேறொன் றில்லார்
தம்மையே தமக்கொப் பான
நிலைமையால் தலைமை சார்ந்தார்.

பாடல் எண் : 9

இன்றிவர் பெருமை எம்மால்
இயம்பலா மெல்லைத் தாமோ
தென்றமிழ்ப் பயனா யுள்ள
திருத்தொண்டத் தொகைமுன் பாட
அன்றுவன் றொண்டர் தம்மை
யருளிய ஆரூர் அண்ணல்
முன்திரு வாக்காற் கோத்த
முதற்பொரு ளானா ரென்றால்.

பாடல் எண் : 10

அகலிடத் துயர்ந்த தில்லை
யந்தண ரகில மெல்லாம்
புகழ்திரு மறையோ ரென்றும்
பொதுநடம் போற்றி வாழ்க
நிகழ்திரு நீல கண்டக்
குயவனார் நீடு வாய்மை
திகழுமன் புடைய தொண்டர்
செய்தவங் கூற லுற்றாம்.