கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.

கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின்கண்கள் வெறும் புண்கள்” என்று பொய்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச்சிறப்பாக குறிப்பிடுகிறார்.

திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான்.

மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார்.

குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலக்ஷ்மிகரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசிதபுத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள். நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றிவைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது. அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்த நெறியை உணர்த்துகின்றன. இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகும். இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம். முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது. வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமசிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.

ருக் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார். திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்: ”விளக்கொளியாகிய மின் கொடியாளை விளக்கொளியாக விளங்கிடு நீயே ! விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே ! என்று சிறப்பித்துக் கூறுகிறார்.”

இறைவன் சந்நதியில் ஏற்றப்படும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின் கதை மூலம் அறியலாம். முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்த போது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.

இவ்வழிபாடு திருவண்ணாமலையிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ‘ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே’ என்கின்றனர் அப்பர் சுவாமிகள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது.

திருவண்ணாமலை புண்ணிய பூமி, ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள், தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை  ஜாதி,  இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலை. அடி முடி காணமுடியாத தீ பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம்பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.

படைக்கும் தொழில் செய்யும் ப்ரஹ்மாவும் காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலும் தானே பெரியவர் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அச்ஜோதியின் முடியைக் காண அன்னப் பறவை வடிவங்கொண்டு  ப்ரஹ்மாவும்  விண்ணுலகம் சுற்றினார். அடியைக் காண திருமால், வராஹ அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடியைத் தேடினார்.

அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார்.

இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும். யோக நெறியால் அன்றிக் காண முடியாத தெய்வ ஒளியை திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.