1.002 திருப்புகலூர்

திருச்சிற்றம்பலம்


திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகம் முதல் திருமுறை


ஊர் : 2. திருப்புகலூர்

சுவாமி அக்னீஸ்வரர் திருவடிப் போற்றி

தேவி கருந்தாழ் குழலி அம்மை திருவடிப் போற்றி


பாடல் எண். 1

குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,
முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.

பொருள்

இசையுடன் கூடிய பாடல்களை பாடுபவன், உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து உயிர்களின் மீதும் விருப்பம் கொண்டவன். அவ்வுயிர்கள் அனைத்தும் தன்னை உணரும் வகையில் அவைகளுக்கு விதியை வகுத்து அவ்விதியில் கலந்து நிற்பவன். தனது வாகனமான எருதின் மீது ஏறி வந்து மக்கள் இடும் உண் பொருளை விரும்பி ஏற்பவன். தனது இடையில் மானின் தோலை ஆடையாக உடுத்துபவன். அவன் விரும்பும் சோலைகள் நிறைந்த ஒரு பகுதியில், மலர்கள் மீது புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேன் உண்ணும் வானளாவிய சேலைகள் நிறைந்த ஊர் புகலூராம்.


பாடல் எண்.2

காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொருபாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரியாடை
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ்சோலைப்
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புகலூரே.

காதில் குண்டலங்களை அணிந்தவன், அழகிய மார்பினில் பூணூல் அணிந்தவன், உமாதேவிக்கு இடபாகத்தை கொடுத்த திருமேனியன், யானையின் தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகைய ஈசன் எழுந்தருளிய இடம், தேவர்களும் வணங்கும் இடம், சோலைகளில் வரிவண்டுகள் தேனுண்ண விரும்பி இசைப்பாடும் ஊர் புகலூர்.

திருப்புகலூர் : 63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாருடைய அவதார தலம் திருப்புகலூர். முருக நாயனாருக்கு இத்தலத்தில் சன்னிதி உள்ளது. இத்தலத்திலிருந்த முருகநாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்த தலம். சிவபெருமான் திருநாவுக்கரசருக்கு இத்தலத்தில் முக்தி கொடுத்தார்.


பாடல் எண். 3

பண்ணிலாவும்மறை பாடலினான்இறை சேரும்வளையங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழல் என்றுந்தொழுதேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவன்னிடமென்பர்
மண்ணிலாவும்மடி யார்குடிமைத்தொழின் மல்கும்புகலூரே.

வேதங்களை ஏழு சுவரங்களில் பாடலாக பாடுபவன், அழகிய இடக்கரத்தில் வளையல்கள் அணிந்திருக்கும் உமாதேவியை தனது இடபுரத்தில் உடையவன். சிவனின் திருவடிகளை, திருநாமத்தை எப்போதும் போற்றி வணங்கும் சிவஞானம் பெற்ற பெரியவர்களின் உள்ளத்தில் குடிகொண்டு, அவர்களின் மனத்தில் என்றும் நீங்காமல் இருப்பவன். இவ்வாறு இருக்கும் ஈசன் விரும்பி எழுந்தருளும் இடம் புகலூர், இவ்வுலகில் வாழும் பல அடியவர்கள் தனது குடும்பத்துடன் வந்து பணி செய்யும் ஊராம் புகலூர்.

திருப்புகலூர் : அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்ற தலம். அக்னி பூஜித்த தலமாதலால் இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம்.


பாடல் எண்.4

நீரின்மல்குசடை யன்விடையன்அடை யார்தம்மரண்மூன்றுஞ்
சீரின்மல்குமலை யேசிலையாகமு னிந்தானுலகுய்யக்
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிடமென்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புகலூரே.

கங்கை நீரை தனது சடை முடி மீது நிறைத்துக் கொண்டவன். பல சிறப்புக்கள் நிறைந்த மேரு மலையை உடையவன். காளையை ஊர்தியாக கொண்டவன். முப்புரங்களையும் அழித்தவன். உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் காக்க, கருநிறமான கடலில் இருந்து தோன்றிய நஞ்சை அமுதமாக உண்டவன். அவ்வாறான ஈசன் விரும்பி எழுந்தருளும் இடமாம் புகலூர். ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பு பெற்ற ஊராம் புகலூர்.

திருப்புகலூர் :  இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. சிவபெருமான் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதால். புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கமாக உள்ளது.


பாடல் எண்.5

செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடியார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணிவாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள்பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாது பொருந்தும்புகலூரே.

சிவபெருமான் தனது சிவந்த திருமேனியிலே வெள்ளை நிறமான திருநீற்றை பூசிச் கொள்பவர். தன்னிடம் வரும் அடியார்களின் துன்பத்தை நீக்குபவர். தன்னையே என்றும் பாடி அவரிடம் பணிபவர்களுக்கு உண்மையானவர். சிவபெருமான் விரும்பி எழுந்தருளிய இடம் புகலூர். பெரியோர்கள் சிவபெருமானின் அருளை பெற விரும்பி உண்மையான மனத்துடன் என்றும் சிவபெருமானை மறக்காமல் வாழும் இடமாம் புகலூர்.


பாடல் எண்.6

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில்கானில்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிடமென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந்தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புகலூரே.

சிவபெருமானது வளக்காலில் அணிந்த வீரம் மிக்க கழலின் (ஆண்கள் அணியும் சிலம்பு) ஓசையும், சிவபெருமானது இடபாகத்தே வீற்றிருக்கும் உமாதேவியின் இடக்காலில் அணிந்த சிலம்பின் ஒலியும், மேலும் புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகள் முழுங்க, குள்ளமான பூதகணங்கள் சிவபெருமானை போற்றிட, பழகிய இடமான சுடுகாட்டில் சிவபெருமான் நடனம் புரியும் இடம். திருவிழாக்களின் ஓசையும், சிவனடியார்கள் சிவனை போற்றி பாடும் பாடலும், கடல் அலைகளின் ஓசையையே மங்க செய்யும் அளவிற்கு அவைகளின் ஒலி இருக்கும் ஊராம் புகலூர்.

திருப்புகலூர் :  கருந்தாழ் குழலி அம்பாள் மிகவும் விசேஷமானவள். அம்மன் கருந்தாழ் குழலி பெண் ஒருத்திக்கு தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கிறாள். எனவே சூலிகாம்பாள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.


பாடல் எண்.7

வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதிசூடி
உள்ளமார்ந்தவடி யார்தொழுதேத்த வுகக்கும்அருள்தந்தெம்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுள்ளிடமென்பர்
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புகலூரே.

வெள்ளமாக வந்த கங்கையின் நீரை சிவபெருமான் தனது செஞ்சடையின் மீது அடக்கி, அதன் மேல் பிறை நிலவை சூடி, சிவனடியார்கள் மனம் உருகி சிவபெருமானை தொழுத போது அவர்களின் மனம் மகிழ அருளை புரிந்து, என்னைப் (திருஞானசம்பந்தர்) பற்றிய வினைகளையும், பழிகளையும் தீர்த்த பிரான் எமது சிவபெருமான் உறையும் இடம், மீன் கொத்தி போன்ற பறவை இனங்கள் மீன்களை உண்பதற்காக வந்து தங்குவதால் அங்குள்ள வயல்களின் வளம் மிகுந்து இருக்கும் ஊராம் புகலூர்.

திருப்புகலூர் : நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சன்னதி உள்ளது. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இங்கிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி கேட்டதாம். இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு.


பாடல் எண்.8

தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடிதிண்டோள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள்செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிடமென்பர்
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புகலூரே.

இலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையை தனது இரு கரங்களினால் தூக்கிய போது, அவனுடைய தலைகள், தோள்களின் மீது சிவபெருமான் தனது கால் விரலால் நசுக்கியதால், இராவணன் சாம வேதத்தில் சிவபெருமானை போற்றியதன் விளைவால் இராவணனுக்கு அருள் செய்த சிவபெருமானே. சடை முடி கொண்ட சிவபெருமானே, உமாதேவியுடன் எழுந்தருளும் இடமான அழகிய மாளிகைகள்  நிறைந்துள்ள ஊராம் புகலூர்.

திருப்புகலூர் : ஆலயத்தில் விநாயகர், சுப்ரமணியர், கடந்த காலத்தைக் குறிப்பிடும் பூதேஸ்வரர், நிகழ்காலத்தைக் குறிப்பிடும் வர்த்தமானீஸ்வரர், எதிர்காலத்தைக் குறிக்கும் பவிஷ்யேஸ்வரர் மற்றும் திரிமுகாசுரன் எனப் பல மூர்த்திகள் உள்ளன. ததீசி முனிவர், பராசரர், பிருகு, புலஸ்தியர், ஜாபாலி, பரத்வாஜர், வாமதேவர் ஆகிய முனிவர்கள் தனித்தனியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கங்களும் இங்கு உள்ளன. நடராஜர் உட்பிராகாரத்து ஈசான்ய மூலையில் எழுந்தருளியுள்ளார்


பாடல் எண். 9

நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடியார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழுதேத்த
ஏகம்வைத்தவெரி யாய்மிகவோங்கிய எம்மானிடம்போலும்
போகம்வைத்தபொழி லின்னிழலான்மது வாரும்புகலூரே.

சிவபெருமான் நாகத்தை தனது தலையில் சூடிக் கொண்டவன். தன் திருவடிகளை போற்றிப் பாடும் அடியார்களை தன்  மனதில் வைத்துப் போற்றும் தலைவன். பிரம்மனும் திருமாலும் வழிபட மிக ஓங்கிய அடி முடி காணாத ஏகனான (தனக்கு உவமையில்லா சிறப்புடையோன்) எம்பெருமான் சிவபெருமானுக்கு விருப்பமான இடமாம் புகலூர். புகலூரில் பல்வகைப் பயன்களை தருவதோடு, தேன் நிறைந்து காணப்படும் சிறப்பு மிக்க ஊராம் புகலூர்.

திருப்புகலூர் : புகல் என்றால் அடைக்கலம் புகுதல் என்று பொருள். திருப்புகலூர் என்ற பெயர் கொண்ட இத்தலத்தை வடமொழியில் சரண்யபுரம் என்பர். வாதாபி, வில்வலன் என்ற இரு அசுரர்களுக்கு அஞ்சி ஓடிவந்த தேவர்கள், அசுரர்கள் அகத்தியரால் அழிக்கப்படும் வரையில் இங்கு அடைக்கலம் புகுந்திருந்தார்கள். அதனால்தான் ‘புகலூர்’ என்று இத்தலத்துக்குப் பெயர் ஏற்பட்டது.


பாடல் எண். 10

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொருளல்லாக்
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம்போலும்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதிசெய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புகலூரே.

எண்ணிக்கையில் அதிகமான பௌத்த முனிவர்கள், பௌத்தர்கள், சமணர்கள்  ஆகியவர்களின் உண்மையில்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளை  கேட்காமல், சிவபெருமான் மீது அதிகமான பக்தி வைத்த, தவம் செய்யும் அடியார்களின் தலைவனாகிய எம்பெருமான், சிவபெருமான் விரும்பி எழுந்தருளும் ஊராம் புகலூர்.  அவ்வாறான அடியார்கள் மலர் பறித்து சிவபெருமானுக்கு தூவி, துதி செய்து தவநெறியில் வாழ்ந்து விண்ணுலகம் சென்றடைய சிவவழிபாடுகளை செய்யும் ஊராம் புகலூர்.

திருப்புகலூர் :  மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் “ட” என்ற அமைப்பில் இருக்கிறார்கள்.


பாடல் எண். 11

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புகலூரைக்
கற்றுநல்லவவர் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்மாலை
பற்றியென்றும்இசை பாடியமாந்தர் பரமன்னடிசேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலிவாரே.

புற்றியல் வாழும் பாம்புகளை தனது இடையிலே கட்டிக் கொண்டவன் சிவபெருமானது புகழை பாடும் அடியவர்கள் வாழும் சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தன் பாடிய தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை எப்போதும் இசையோடு பாடி வழிபடும் மனிதர்கள் சிவபெருமானின் திருவடியை அடைந்து வாழ்வில் குற்றம் குறைபாடுகள் அகன்று புகழ்பெற்று விளங்குவார்கள்.

திருப்புகலூர் :  நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply