1.001 திருபிரமபுரம்

Artilce_Header_all

திருச்சிற்றம்பலம்


திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் பதிகம் முதல் திருமுறை –  திருப்பிரமபுரம்


(திருப்பிரமபுரம் என்பது சீர்காழி. அம்பிகை ஞானசம்பந்தப் பெருமானுக்கு ஞானப்பாலூட்டிய தலம். ஞானப்பாலுண்ட இந்தப் புனித தலத்திலேயே ஞானசம்பந்தப் பெருமான் பாடிய அற்புதப் பதிகம் இது. இப்பதிகத்தை படிப்பதன் மூலம்  வினைகள் முழுதும் தீரப் பெருவார்கள்)


பாடல்  எண் 1.

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்இவன் அன்றே!

பொருள்

திருஞானசம்பந்தர் சிவபெருமானை தனது மனதில் எண்ணி  – உனது இடபாகத்தே இடம் பெற்ற உமாதேவியின் திருச்செவியில் தோடனிந்தவனே, ரிஷப வாகனத்தின் மீது ஏறி, வெண்மையான நிலவை முடி மீது சூடியவனே, சுடுகாட்டில் கிடைக்கும் சாம்பல் பொடியை உனது உடல் முழுவதும் பூசி கொள்வதினால் எனது உள்ளத்தை கவர்ந்த கள்வனே. இதழ்கள் விரிந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மன், படைத்தல் தொழில் செய்ய உன்னை வேண்டிட, பிரம்மனுக்கு அருள் செய்தவனே, பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே எம் சிவபெருமானே.


பாட்டும் பொருளும் – உரைநடை வடிவில் – (ஆடியோ)


பாடல் இசை வடிவில் – பாடியவர் – பொதிகை புகழ் – அருள்இசை மணி கே.ஆறுமுகம்


 


பாடல்  எண் 2.

முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்இவன் அன்றே!

பொருள் :

வயதான ஆமையின் ஓட்டினையும், இளமையான பாம்பையும்,  பன்றியின் பல்லையும் கோத்து மாலையாக அணிந்தவனே, தசைவற்றிய மண்டை ஓட்டில் உண்ணும் பொருள் கேட்டு வந்து எனது உள்ளத்தை கவர்ந்தவனே, கல்வியில் சிறந்தவர்கள் மற்றும் சிறந்த பெரியோர்கள் உன் திருவடிகளை அவர்களின் கைகளினால் தொழுத போது அவர்களுக்கு அருள் செய்த எனது பெருமானே, பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே எம் சிவபெருமானே, அது நீதானே.


 


பாடல்  எண் 3

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இதுஎன்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்இவன் அன்றே!

பொருள் :

கங்கை நதியில் நீர் நிரம்பி, உனது நிமிர்ந்த சிவந்த சடை முடி மீது  நிலவை பொழியும் வெள்ளி பிறைமதியை சூடி, சிவபெருமான் நினைவினால் கைகளில் அணிந்துள்ள சங்க வளையல்கள் கழன்று விழுமாறு செய்த என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வனே, சிவபெருமானே.  உலகம் அழியும் காலத்தில் இவ்வுலகில் உள்ள ஊர்கள் அனைத்தும் அழிந்த போதும், பிரமபுரம் மட்டும் அழியாது ஒப்பற்ற ஊர் இது என புகழைப் பெற்ற பிரமபுரத்தில் வாழும் பெருமானே அது நீயன்றோ. சிவபெருமானே.


 


பாடல்  எண். 4

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்இவன் அன்றே!

பொருள் :

வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த அரக்கர்களின் பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான கோட்டைகளை தனது கணை ஒன்றினால் அழித்த சிவபெருமானே, அழித்தது மட்டுமல்லாமல் பிரம்மனது ஐந்தாவது தலையை கிள்ளி மனமகிழ்வோடு பலி ஏற்க வந்த எனது உள்ளத்தை கவர்ந்தவனே, சிவபெருமானே. விஷம் உள்ள பாம்பையும், மென்மையான கொன்றை மலர்களையும் உனது மார்பில் சூடியவனே, உனது இடபாகத்தே உமாதேவியை கொண்டவனாய் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானே, அது  நீயன்றோ, சிவபெருமானே.


 


பாடல்  எண் 5

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன,
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்,
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே!

பொருள் :

சிவபெருமான் தனது திருமேனியிலே உமாதேவிக்கு இடப்பாகத்தை அளித்தவன், சடைமுடியுடன் ரிஷப வாகனத்தின் மீது ஊர்ந்து வருபவன் என, சிவபெருமான் வரும் அழகை தோழியர் கூற, அவ்வாறே வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வனே, கருமையான கடல் பொங்கி உலகத்தை சூழ்ந்த போதும், பெருமை பெற்ற பிரமபுரத்தை தோணிபுரமாய் மிதக்க செய்து. இவ்வாறு பெருமைபெற்ற பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானே, சிவபெருமானே அது நீயன்றோ.


 


பாடல்  எண். 6

மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்இவன் அன்றே!

பொருள் :

சிவபெருமான், வேதத்தை பாடிக்கொண்டும், ஆடிக் கொண்டும், அவரது ஆயுதங்களில் ஒன்றான மழுவை கையில் ஏந்தி வந்து, எனது கையில் உள்ள சங்க வளையல்கள் கழன்று விழும் அளவிற்கு என்னை உடல் இளையச் செய்த என் உள்ளத்தை கவர்ந்த கள்வனே, சிவபெருமானே. இருள் நிறைந்த நிலப் பகுதியில் உயரமாக வளர்ந்த மரங்கள் இருக்கும் சோலையில், பிறை கலந்த நிலவை சூடி, ஒளிக் கதிர்களை பொழியவைத்து பிரமபுரத்தில் எழுந்தருளும் எம்பெருமானே, சிவபெருமானே, அது நீயன்றோ


 


பாடல்  எண் .7

சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

பொருள் :

சிவபெருமானே, எப்போதும் உனது சடையில் கலந்த கங்கையை உடையவனே, நின் திருக்கரத்தில் எப்போதும் தகிக்கும் அனலை உடையவனே, உனது ஆடையின் மீது வாழும் நாகங்களை கொண்டு இறுகக் கட்டி, பிரகாச ஒளி அலையாய் நடனமாடித் திரிந்து வந்து எனது உள்ளத்தை கவர்ந்த கள்வனே, சிவபெருமானே. உப்பளங்களால் சூழப்பெற்ற கடலும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளை உடையதும், அழகிய சிறகுகளை கொண்ட பெண் அன்னங்களை உடையதுமான அழகிய பிரமபுரத்தில் எழுந்தருளிய சிவனே, சிவபெருமான அது நீயன்றோ


 


பாடல்  எண்.8

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்இவன் அன்றே!

பொருள் :

இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையை பெயர்த்து அவனது பெரும் வீரத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக அவனது மலை போன்ற தோள்களில் வியர்வை தோன்றியது, இராவணனின் வீரம் மிக்க  தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர் கள்வனே, சிவபெருமானே.  இவ்வுலகில் சூது, களவு, காமம், ஏமாற்றுதல், வஞ்கம், நம்பிக்கை துரோகம் என மிகுதியான துன்பம் ஏற்படும் போது, அதனால் கடல் பொங்கி உலகம் அழியும் காலத்திலும், பிரமபுரத்தை தோணிபுரமாக அழியாது காத்த, எம்பெருமானே, பிரமபுரத்தில் எழுந்தருளிய எம்பெருமானே. சிவபெருமானே, நீயன்றோ.


 


பாடல்  எண்.9

தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்இவன் அன்றே!

பொருள் :

தனக்குள் யார் உயர்ந்தவன் என்ற போட்டியில், உனது தாளை திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்கு முகம் கொண்ட பிரம்மனும் காணும் பொருட்டு, திருமால் பன்றியாகவும், பிரம்மன் அன்னமாகவும் தேடிச் சென்றவர்களுக்கு அண்ணாமலையாக நிமிர்ந்தவனாக விளங்குபவனே, எனது உள்ளத்தை கவர்ந்த கள்வனே, ஒளி பொருந்திய சொல்லாலும், சிவந்த நிறத்தை உடைய மகளிர்கள் மற்றும் உலகத்தார் அனைவரும் உன்னை துதிக்க விரும்பும் எம்பெருமானே, பிரமபுரத்தில் எழுந்தருளிய எம்பெருமானே, சிவபெருமானே. இது நீயன்றோ.


 


பாடல்  எண்.10

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது!” என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்இவன் அன்றே!

பொருள் :

புத்தர்களும், சமணர்களும், சைவத்தை, சிவனை வணங்குபவர் மீது புறம் சொல்லி, அறிவு மற்றும் ஒழுக்கங்களால் நிறைந்தோர் வகுத்த விதிகளை மீறி, பிழைபட்ட, ஒரே கருத்தை அவர்களுக்கு ஏற்புடையதாக சொல்லி திரிய, இவ்வாறான உலகத்தில் எம்பெருமான் சென்று உண் பொருள் கேட்டு, என் உள்ளத்தை கவர்ந்த கள்வனே, சிவபெருமானே. மதபித்து பிடித்தவர்களை, மதயாணையை மயக்கமுற செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தியது போல் ஒரு மாயமான செயல் புரிந்த சிவபெருமானே, பிரமபுரத்தில்  எழுந்தருளிய பித்தனே, சிவனே. சிவபெருமானே அது நீயன்றோ.


 


பாடல்  எண்.11

அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

பொருள் :

மும்மூர்த்திகளில் ஒருவருனும், படைப்பு கடவுளான பிரம்மன் அருமையான ஒழுக்க விதிகளை வேதங்களின் மூலம் உலகிற்கு வழங்கி, தாமரை மலர்கள் உள்ள பெரிய அகன்ற நீர்நிலைகளை பெற்ற பிரமபுரத்தில் எழுந்தருளி முக்தி அளக்கவல்ல முதல்வனே, சிவபெருமானே. மனதினை ஒரு வழிப்படுத்தி, ஐந்து புலன்கள் வழியாக ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை படிக்கவும், கேட்கவும், பிறருக்கு சொல்லவும், அவர்களின் முன் தீவினைகள் யாவும் தீரப் பெருவார்கள். தீவினைகளை போக்க பல வழிகள் இருந்தாலும், இப்பதிகத்தை படிப்பதே எளிமையான வழி


 


திருச்சிற்றம்பலம்


 

One thought on “1.001 திருபிரமபுரம்

Leave a Reply