ஓம் நமசிவாய வங்கி

திருச்சிற்றம்பலம்

Artilce_Header_all

ஓம் நமசிவாய மந்திரம்

திருவைந்தெழுத்து

திருவைந்தெழுத்தை ஓதி உணர்ந்து இன்புறுவதற்கு அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சுவோமாக

கு.சுந்தரமூர்த்தி
திருவண்ணாமலை 1976 கும்பாபிஷேக மலரிலிருந்து தொகுத்தது

உயிர்கள் அனைத்தும் இன்பத்தையே விரும்புகின்றன. அவ்வின்பத்தை அருளாளர்கள் இருவகப்படுத்தியுள்ளனர். உலகியல் நுகர்வு கொண்டு ஒரு காலத்தில் அடைகின்ற இன்பம், பிரிதொரு காலத்தில் உவர்ப்பாக மாறி விடுகின்றது. எனவே இது அழியத் தக்கது என அறிய முடிகின்றது. இதனைச் சிற்றின்பம் என்பர். திருவருள் நுகர்வு கொண்டு அடைகின்ற இன்பம் எப்பொழுதும் இன்பமாய் விளங்குகின்றது. இது எக்காலத்தும் உவர்ப்பதில்லை. இதனைப் பேரின்பம் என்பர். “இன்பம் இடையறாது ஈண்டும்”, பேரா இயற்கை தரும்”, இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என வரும் திருவாக்குகள் எல்லாம் இவ்வின்பத்தையே குறிப்பனவாகும்.

இத்தகைய பேரின்பத்தைத் தருதற்குரிய ஒரே மருந்து திருவைந்தெழுத்தாகும். “வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித் தீய பிறவி நோய் தீர்க்குமே” என நக்கீரர் குறிப்பர். இத்திருவைந்தெழுத்து இறைவனுடைய திருநாமம் ஆகும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் எழுந்தருளுவிக்கப் பெற்றிருக்கும் திருமேனிக்கு ஒவ்வொரு நாமம் உண்டு. அண்ணாமலையார் என்பர், செஞ்சடையப்பர் என்பர், வைத்தியநாதன் என்பர். இப்பெயர்கள் அத்தல மூர்த்திகளுக்குரிய சிறப்புப் பெயர்களாகும். இவ்வனைத்து உருவங்களுக்கும் மூல காரணமாய் நிற்கும் மூர்த்தியைக் குறிக்கும் திருப்பெயர் திருவைந்தெழுத்தாகும்.

“திருநாமம் ஐந்தெழுத்தும் செப்பாராகில்”
“எண்ணிலென் உன்திருநாமத்து எழுந்தஞ்சும்”

என வரும் திருவாக்குகள் இவ்வுண்மையை விளக்கும். இறைவனுடைய திருநாமமாக விளங்கும் இத்திருவைந்தெழுத்து அப்பெருமானுடைய திருவுருவாகவும் விளங்குகின்றது எனக் கூறும் ஞானநூல்.

ஆடும்படிக் கேணல் லம்பலத்தா னையனே
நாடும் திருவடியி லேநகரம் – கூடம்
மகர முதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்

சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகர மபயகரம் – பார்க்கிலிறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கு மகரமது தான்

எனவரும் உண்மை விளக்கத் திருப்பாடல்கள் இறைவனுடைய திருமேனியில் திருவைந்தெழுத்து அமைந்திருக்குமாற்றை விளக்கும்.

திருவைந்தெழுத்து ஓதுவார்தம் பக்குவத்திற்கேற்ப ஐந்து வகையாகப் பிரித்துப் பேசப்பட்டுள்ளது. அவையாவன

1. ஸ்தூல பஞ்சாட்சரம் – நமசிவாய
2. சூக்கும பஞ்சாட்சரம் – சிவாயநம
3. காரண பஞ்சாட்சரம் – சிவாயசிவ
4. மகா காரண பஞ்சாட்சரம் – சிவ
5. மகா மனு – சி

இவ்வகையில் முன்னைய இரண்டுமே திருமுறைகளிலும், ஞானநூல்களிலும் மிகுதியாகப் பேசப் பெற்றுள்ளன. பின்னைய மூன்றும் மிகவும் பக்குவம் பெற்றவர்கள் குருவருள் வழிநின்று உணர்ந்து அனுபவிக்கத் தக்கனவாகும். முன்னையதான ஸ்தூல பஞ்சாட்சரம் இம்மை இன்பம் பெற வேண்டுவோர் ஓதத்தக்கது என்றும், சூக்கும பஞ்சாட்சரம் வீடுபேறு வேண்டுவோர் ஓதத் தக்கது என்றும் ஞானநூல் வரையறை செய்கின்றன.

மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ
மேலாகி மீளா விடின்

சிவமுதலே யாமாறு சேருமேற் றீரும்
பவமிதுநீ யோதும் படி

எனவரும் திருவருட் பயன் காண்க. திருவைந்தெழுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்பதாகும். சிகரம் சிவத்தையும், வகரம் அருளையும், யகரம் உயிரையும், நகரம் மறைப்பையும் (திரோத மலம்) மகரம் ஆணவமலத்தையும் குறிக்கும். எனவே இத்திருவைந்தெழுத்தில் உயிர் (ய) இடையில் நிற்கின்றது. ஒரு மருங்கில் சிவமும். பிறிதொரு மருங்கில் மலமும் நிற்க இவ்வுயிர், தான் சார்ந்ததன் வயப்பட்டு நிற்கும் தன்மை அறியத் தக்கதாகும்.

ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்
ஞான நடந் தானடுவே நாடு

எனவரும் திருவருட்பயன் இவ்வுண்மையை அறிவுறுத்தி உயிர் சாரவேண்டிய பொருள் எது என்பதையும் குறிப்பாக அறிவுறுத்துகின்றது. குருவருள் வழிநின்று இவ்வுண்மையை உணர்ந்து ஓதுவார், தான் ஓதியதின் பயனாகச் சிவமாம் பெருந்தன்மையை அடைவர்.

நாம் ஒழிந்து
சிவமான வா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ
என்னும் அருள் அனுபவமும் காண்க.

திருவைந் தெழுத்தை வாயால் ஒலித்தலினும் மனத்தால் உன்னுதலே தக்கதாகும்.

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவுந் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ வாய தெளிவினுள்ளார்கள்
சிவசிவ வாகுந் திருவருளாமே
என வரும் திருமந்திரம் இவ்வுண்மையை விளக்கும்

திருமுறைகளும், சாத்திரங்களும் போற்றிக் கூறுவதெல்லாம் திருவைந்தெழுத்தின் பெருமையே ஆகும். திருஞானசம்பந்தர் இரு பதிகங்களிலும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் ஒவ்வொரு பதிகங்களிலும் திருவைந்தெழுந்தின் பெருமையை அருளியுள்ளார்கள். மாணிக்கவாசகர் சிவபுராணாத்துள் இத்திருவந்தெழுத்தை முன் வைத்து வாழ்த்தி, இதுவே உயிர்க்கு ஊதியம் எனத்திருக்கோவையாரின் இறுதிப் பாடலில் உணர்த்தியிருப்பது இதயத்தில் எண்ணுதற்குரியதாகும். மணிவாசகர் இத்திருவைந்தெழுத்தை ஓதுவதற்குத் தாம் செய்திருக்கும் தவத்தையும், இத்திருவைந்தெழுத்தை ஓதப்பெற்றதால் தாம் பெற்ற பயனையும் நெகிழ்ந்தும், குழைந்தும் கூறியருளிய திருவாக்குப் பன்முறையும் நினைந்து நினைந்து இன்புறத் தக்கதாகும்.

நானேயோ தவஞ்செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் னமுதமுமாய்த்
தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனது உள்ளம்
புகுந்து அடியேற் கருள் செய்தான்
ஊனாரு முயிர்வாழ்க்.கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே

இத்திருப்பாடலைப் படிக்கும் தொறும் ஒரு பேரின்பம் உள்ளத்து ஊறிக் கொண்டேயிருக்கும். கருவூர்த்தேவர் திருவைந்தெழுத்தின் சொற்பாதத்தை உள் வைத்து உள்ளம் அள்ளுறும் தொண்டருக்கு எண்திசைக் கனகம், பற்பதக்குவை, பைம்பொன் மாளிகை, பவளவாயவர் இன்பம், கற்பகப் பொழில் ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பர். பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்துள் 137 பாடல்களால் இதன் பெருமை விரிந்துரைக்கப்பட்டுள்ளது. பதினோராம் திருமுறையுள் பட்டினத்தடிகள் “நித்தம் நித்தம் தேறும் பொருள் திருவைந் தெழுத்தும், திருநீறும், கண்டிகையும்” என்பர். பன்னிரெண்டாம் திருமுறையுள் சேக்கிழார் திருவைந்தெழுத்தைக் கருத்தின் பயனாகக் கொள்ள வேண்டும் என்றும், “ஞான மெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சியாச் சொலாம்” என்றும், “ஆதி மந்திரம் அஞ்செழுத்து” என்றும் அருளிச் சிறப்பிப்பார்.

அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தெ ஆதிபுராணம் அனைத்தும் – அஞ்செழுத்தெ
மானந்த தாண்டவமும் யாவைக்கும் அப்பாலா
மோனந்தா மாமுத்தி யும்
எனக் சிறப்பிக்கும் சாந்திரம்.

இத்தகைய திருவைந்தெழுத்தை ஓதி உணர்ந்து இன்புறுதற்கு அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சு வோமாக.

நன்றி – கோயில் கும்பாபிஷேக மலர் 2015

http://sivaperuman.com/wp-content/uploads/2016/07/Namasivaya-Mandiram2.pdf

...
Loading